எங்களுக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும் - அப்சரா ரெட்டி கோரிக்கை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார் அப்சரா ரெட்டி.
அப்சரா ரெட்டி
பத்திரிகையாளரான அப்சரா ரெட்டி, அதிமுகவின் செய்தி தொடர்பாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றார். அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அவர், தொடர்ந்து அதிமுகவிலேயே நீடித்து வருகின்றார்.
வரும் மக்களவை தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு கொடுப்பதற்கான தேதி வரு மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று தனது விருப்ப மனுவை அளித்த அப்சரா ரெட்டி, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் திருநங்கைகளுக்கு இடமளிக்கப்படவேண்டும் என கூறி, அதன் காரணமாகவே தான் விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
வாய்ப்பு வழங்கப்படும்
தங்களுக்கென வீட்டு வசதி, மருத்துவ வசதி போன்றவை அரசுகளால் கொண்டுவரப்பட்டாலும், தங்களின் குரல் சட்டமன்றம் - நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் என்ற அப்சரா ரெட்டி, புரட்சிகரமான முடிவுகளை எடுக்கும் அதிமுக தனக்கு வாய்ப்பு வழங்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
எந்த தொகுதியாக இருந்தாலும் கட்சியின் பொதுச்செயலாளர் வாய்ப்பளித்தால் தான் போட்டியிட்டு திமுக மற்றும் பாஜகவை தோற்கடிக்க முயலுவேன் என்று கூறினார்.