தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குப் பாராட்டு விழா - கிராம மக்கள் எடுத்த முடிவு!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குப் பாராட்டு விழா நடத்த உள்ளதாக அரிட்டாபட்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம்
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியைச் சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தத் திட்டத்திற்குத் தொடக்கத்தில் ஆதரவாக இருந்த திமுக அரசு, மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தைக் கைவிடக் கோரி நேரில் வலியுறுத்தினார். அதன்பிறகு டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.
அண்ணாமலை
இதனை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கொண்டாடினர். இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அரிட்டாபட்டியில் இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னைக்கு வருகை தந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.