ஓடும் ரயிலில் மீண்டும் பாலியல் தொல்லை - இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்
ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கபட்டுள்ளது.
கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை
சமீபத்தில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்து ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
திருப்பூரில் வேலை செய்து வரும் 4 மாத கர்ப்பிணியான ரேவதி, தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மருத்துவ பரிசோதனைக்காக ரயிலில் செல்லும் போது வேலூர் மாவட்டம் அருகே இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது.
சிசு உயிரிழப்பு
இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஹேமராஜ் (30) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதிக்கு எலும்புமுறிவுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரேவதியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துவிட்ட நிலையில் அதை பாதுகாப்பான முறையில் அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், மற்றொரு பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர் துாத்துக்குடியில் உள்ள தனியார் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி படித்து வருகிறார்.
மீண்டும் ரயிலில் தொல்லை
அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்ததையடுத்து, துாத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்துள்ளார். அந்த ரயில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நின்ற போது, அருப்புகோட்டையை சேர்ந்த லோடுமேன் சதீஷ்குமார் அந்த ரயிலில் எறியுள்ளார்.
மதுபோதையில் இருந்த சதீஷ்குமார், கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே வரும் போது , இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண் 139 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரளித்தார்.
இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் இன்று(10.02.25) அதிகாலை திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு செய்து சதீஷ்குமாரை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.