கோயில் கட்டிவிட்டால், பாஜகவுக்கு வாக்களித்து விடுவார்களா..? இபிஎஸ் விமர்சனம் - அண்ணாமலை பதிலடி.!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை உரை
என் மண் என் மக்கள் பாதயாத்திரையை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, ஆங்காங்கே மக்களிடையும் உரையாற்றி வருகின்றார். பாதயாத்திரையின் பகுதியாக சிதம்பரம் வந்தடைந்த அவர் அங்கு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, 157-வது தொகுதியில் யாத்திரை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்று கூறினார்.
சாதி, லஞ்சம், குடும்ப அரசியல், அடாவடி இல்லாத அரசியல் வேண்டுமென மக்கள் கருதுகின்றனர் என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இது தான் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலாகும் என்று கூறினார்.
கோயில் கட்டிவிட்டால்..
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் லட்சக்கணக்கான கோயில்கள் சரிவர பராமரிக்காமல், மாதத்துக்கு ஒருமுறை சிதம்பரத்துக்கு வந்துவிடுகின்றனர் என்று விமர்சித்த அவர், பொது தீட்சிதர்கள்தான் கோயிலை நிர்வகிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னரும், அறநிலையத் துறையினர் தொல்லை கொடுத்துவருகின்றனர் என்றார்.
சிதம்பரம் கோயிலில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பிரச்சினை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என ஆளும் மாநில மீது தனது விமர்சனத்தை முன்வைத்த அண்ணாமலை, தமிழக கோயில்களை சரியாகப் பராமரித்து, வசதிகளை செய்தால் ரூ.2 லட்சம் கோடி வரிவாய் கிடைக்கும் என்று எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வென்று, மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்து, கோயில் கட்டிவிட்டால், பாஜகவுக்கு வாக்களித்து விடுவார்களா என என்றால், சரித்திரம், பாரம்பரியம், கலாசாரத்தை மீட்டுக் கொடுத்த ஒரேதலைவர் மோடிதான் என்று பதிலளித்தார்.