வேட்பாளர் பட்டியல் தயார் - டெல்லி புறப்பட்ட அண்ணாமலை - இவர்களுக்கு வாய்ப்பா..?
தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
மக்களவை தேர்தல்
தமிழகத்தில் இந்த மக்களவை தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜகவின் கூட்டணி, தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி என பல போட்டி ஏற்பட்டுள்ளது.
பாஜகவை எதிர்த்தே தேர்தலை திராவிட கட்சிகள் சந்திப்பதால், இந்த தேர்தல் என்பது பாஜகவிற்கு பெரும் சவாலான ஒன்றே என்று கூறலாம். மற்ற வட மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி என்ற நிலையில், முக்கிய கட்சிகளின் எதிர்ப்பும் அக்கட்சிக்கு பெரும் சவாலாகி இருக்கின்றது.
வேட்பாளர் பட்டியல்
தேசிய அளவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பாஜக வெளியிட்டது. ஆனால், இதில் இன்னும் பல மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதில், தமிழகமும் இடம்பெற்றுள்ளது.
இந்த சூழலில் தான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, பாஜக மாநில தேர்தல் குழு இன்று டெல்லி செல்கிறது என்றும் 39 தொகுதிகிளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டார்.
தேசிய தலைமையிடம் தொண்டர்கள், மக்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளோம் என்றும் கட்சி சார்பில் போட்டியிட ஒரே தொகுதியில் அதிகபட்சமாக 63 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களின் பெயரை தெரிவிக்காத அண்ணாமலை, இந்த பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு சென்றார்.