நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் - அண்ணாமலை பேட்டி!
தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரின் பாதயாத்திரையும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது "பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன, அதற்குள் நிறைய வேலைகள் இருக்கிறது.
தனி கவனம்
பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழக பா.ஜ.க. மிகவும் தெளிவாக இருக்கிறது. ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க.-வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்தோம். 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன" என கூறினார்.
மேலும் பேசிய அண்ணாமலை "தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த இருக்கிறோம். கட்சியின் கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்த இருக்கிறோம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனையில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை," என தெரிவித்தார்.