யாத்திரையை விட்டுவிட்டு அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் - அப்படி என்ன காரணம்?
யாத்திரை நடக்கும் நிலையில் அண்ணாமலை திடீரென டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பாதயாத்திரை
‛‛என் மண் என் மக்கள்'' என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
கூட்டணி கட்சி சார்பில் ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்று பேசினார். தற்போது பாதயாத்திரை மதுரை மாவட்டத்தில் நடந்து வருகிறது.
டெல்லி பயணம்
இந்த சூழலில் இன்று அவர் திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் உள்ளன. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் கீழ் செல்லவுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக-அதிமுக கட்சிகள் தமிழகத்தில் கூட்டணியில் உள்ளன.
சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த என்டிஏ கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று இருந்தார்.
இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் அதிமுக-பாஜக தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பேச தான் அண்ணாமலை திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.