ஊடகங்களை உரசிப்பார்க்க வேண்டாம் - அண்ணாமலைக்கு பிரஸ் கிளப் கண்டனம்!
சென்னையில் அண்ணாமலை யாராக இருந்தாலும் சேனல் பெயரையும், செய்தியாளர் பெயரையும் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள்.
கட்சி சேனல் நடத்துபவர்களிடம் பேச விரும்பவில்லை, யூடியூப் சேனல் செய்தியாளர்கள் யாரும் என்னுடைய செய்தியாளர் சந்திப்புக்கு வர வேண்டாம் என ஆவேசமாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியிருந்தார். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது .
சென்னை பிரஸ் கிளப்
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அண்ணாமலை ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
மநீம கண்டனம்
இதுதொடர்பாக மக்கள்நீதி மையத்தின் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்தியாளரை மிரட்டும் தொணியில் ஆவேசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும், அநாகரீகமாகவும் நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வதையே வாடிக்கையாக அண்ணாமலை அவர்கள் கொண்டிருப்பது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு ஏற்புடையதல்ல.
மேலும் அனைத்து துறைகளிலும் மத்திய அரசு டிஜிட்டல் மயத்தை வலியுறுத்தி வரும் நிலையில் ஊடகத்துறையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பிரிவான யூடியூப் சேனல் நடத்துவோரை இழிவுபடுத்தும் வகையில் பேசியது கடும் கண்டனத்திற்குரியதாகும்.எனவே நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டமைக்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.