மனுஷன் உயிருக்கு பாதுகாப்பே இல்லை...தமிழகத்தில் இப்படி பார்த்ததே இல்லை !! அண்ணாமலை
சென்னை வானகரம் பகுதியில் தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பாஜக மீட்டிங்
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகளிடத்தில் அண்ணாமலை பேசும் போது, தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதனின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்பதை போல, திமுகவின் அரசாங்கம் செயல்படுகிறது. இதற்குமுன் எப்போதும் தமிழகம் இதுபோல் வன்முறை மாநிலமாக பார்த்ததில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசின் பிடியில் இது நடக்கிறது. மற்றொரு பக்கம் கள்ளச்சாராய ஆறு போல் ஓடுகிறது. திருப்பூர், கோவை, உடுமலைப்பேட்டையில் 5 பேர் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் இருக்கிறார்கள்.
குரலாக பாஜக
கள்ளக்குறிச்சியில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த ஆண்டில் மரக்காணம், விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் 22 பேர் இதே கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தார்கள். முன்னெப்போதும் இல்லாமல் தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது. இதனை கேட்கக்கூட நாதியில்லை. யாருக்கும் தைரியமும் இல்லை.
காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களையே கூலிப்படை வெட்டிக் கொலை செய்யும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சாமானிய மனிதன் அரசிடம் கேள்வி கேட்பதற்கு துணிவு குறைந்துள்ளது. அப்படியே கேட்டால், அவர்களுக்கே கைது மட்டுமே பரிசாக கிடைக்கிறது.
எனவே இந்த நேரத்தில், இன்னும் கம்பீரமாக, வேகமாக, சாமானிய மனிதர்களுக்காக பாஜகவின் குரல் இருக்கவேண்டும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீய சக்தியின் ஆட்சி எறியப்படும் வரை, பாஜகவின் குரல் ஒலிக்க வேண்டும் என்று அண்ணாமலை நிர்வாகிகளிடத்தில் பேசினார்.