சென்னை வெள்ளம் - 6000 ரூபாய் கொடுத்தது பிரதமர் மோடி தான் - அண்ணாமலை
சென்னை பெருவெள்ள காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கியது பிரதமர் மோடி தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை உரை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் பாதயாத்திரை மேற்கொண்டு அவர் நேற்று சென்னை போரூர் காரப்பக்கத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பெண்களை மையப்படுத்தி தான் பிரதமர் மோடி திட்டங்களை தீட்டிவருவதாக குறிப்பிட்டு தாயை நேசிக்கும் காரணத்தால் தான் பெண்களை ஒவ்வொரு இடத்திலும் முன்னிலைப்படுத்தி வருகிறார் மோடி என்றார்.
100 சதவீதம் வீடுகளில் கேஸ் சிலிண்டர் திட்டம் கொண்டு வந்தார் மோடி என்றும் இந்தியாவில் 10 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அண்ணாமலை, பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் பெண்கள் பெயரில் தான் கட்டப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
6,000 ரூபாய்
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் கொடுத்தது பிரதமர் மோடிதான் என்ற அண்ணாமலை, அந்த பணத்தை போட்டு கொடுத்த 50 பைசா கவரும் 5 ரூபாய் மஞ்சப்பையும்தான் மாநில அரசு கொடுத்தது என்றும் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் குடும்பத்தினரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் சீட்டு கொடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், பாஜகவில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சீட்டு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.