அண்ணாமலை பேசியது உண்மைதான் ஆனால்.., வரலாற்று ஆய்வாளர் தகவல்!
முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விமர்சனம் செய்ததாக அண்ணாமலை கூறிய சம்பவம் குறித்து வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார்.n
அண்ணாமலை பேச்சு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விமர்சனம் செய்ததாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். மேலும், அதில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மன்னிப்பு கேட்டார் என்று கூறியது மற்றும் அவரை பெயர் சொல்லி அண்ணாதுரை என்று கூறியதால் அவமதிப்பதாக கருதி அ.தி.மு.க., தி.மு.க., கட்சித் தலைவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று கூறினர். பின்னர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவுக்கு இவரது பேச்சு காரணமாக இருந்தது.
வரலாற்று ஆய்வாளர்
இந்நிலையில், மதுரையை சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொடர்பான வரலாற்று ஆய்வாளர் வி.எஸ்.நவமணி இவர் கூறிய வரலாறு உண்மைதான் என்று கூறியுள்ளார். மேலும், "மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் 1956ல் நடந்தது. அதன் தலைவராக பி.டி.ராஜன் இருந்தார். 10 நாட்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி வீதியில் சொற்பொழிவுகளும், மதுரை தமுக்கத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
முதல் நாள் மூத்தறிஞர் ராஜாஜி பேசினார், 6வது நாள் 'சேதுபதியின் தமிழ்த் தொண்டு' என்ற தலைப்பில் தேவர் பேசுவதாக இருந்தது. 4ம் நாள் பி.டி.ராஜன், அதில் தான் பேச வேண்டிய வாய்ப்பை அழைப்பிதழில் பெயரே இல்லாத அண்ணாதுரைக்கு வழங்கினார் பி.டி.ராஜன். இது குறித்து முத்துராமலிங்க தேவருக்கு தெரியவர அண்ணே நான் பேச வேண்டும் என பி.டி.ராஜனை பார்த்து கூறிவிட்டு மேடையேற முயன்றார்.
அவரை லேசாக தள்ளிவிட்டு மேடையேறிய தேவர் "அப்போது மரபு மீறி மேடையை கைப்பற்றுவதும், ஒரு மாது தலைமையேற்றிருக்கும் போது மீறி பேசுவதும் அடியேனுக்கு முதலும், கடைசியும் இதுதான் என துவங்கி கோபத்தில் அக்னி வார்த்தைகளால் கொதித்தார்". அப்பொழுது முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை விமர்சித்தார் தேவர், ஆனால் அண்ணாதுரை மன்னிப்பு கேட்கவில்லை.
இதற்கு எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எழுதிய 'பல கோணங்களில் பசும்பொன் தேவர்' என்ற புத்தகம், 1974 ல் முத்துராமலிங்க தேவர் சிலை திறப்பு விழாவின் போது வெளியான விழா மலரில் அவர் எழுதிய கட்டுரை, திருமலை எழுதிய 'மதுரை அரசியல்', கமலதியாகராஜன் எழுதிய 'பி.டி.ஆர்., வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தில் இடம் பெற்ற 'பி.டி.ராஜன் தமிழ்ச் சங்கம் தகராறு' என்ற பகுதிகள் ஆதாரமாக உள்ளன" என்று கூறியுள்ளார்.