கூட்டணி பத்தி பேசாதீங்க...குழப்பத்தில் அதிமுக..? தலைமையின் முடிவு என்ன..?
தொடர்ந்து கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் பொதுவெளியில் பேசப்பட்டு வரும் சூழலில், கட்சியினர் அதுகுறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முறிந்த கூட்டணி
பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக இருந்து வந்தது அதிமுக. கிட்டத்தட்ட வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியே தொடரும் என நிலைமை இருந்து வந்த நிலையில், தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னர், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான ஜெயலலிதா குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பிரச்சனை பேசி சுமுகமாக தீர்க்கப்பட்டது.
பொது வெளியில் பேசக்கூடாது
ஆனால் மீண்டும் சில தினங்கள் முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் சர்சைககளை ஏற்படுத்த அதன் தொடர்ச்சியாக சில தினங்கள் முன்பு அதிமுக பாஜகவுடனான கூட்டணியில் இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார்.
இது கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கும் சூழலில் இது குறித்து எந்த ஒரு கருத்தும் கட்சி நிர்வாகிகளோ, தலைவர்களோ பொதுவெளியில் பேசக்கூடாது என அதிமுகவின் கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.