முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கப்பட வேண்டும் - அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாடு சட்டமற்ற காடாக மாறியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஆசிரியை கொலை
தஞ்சாவூரில் இன்று(20.11.2024) திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காததால் ஆசிரியை பள்ளியில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்திய மதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், ஓசூரில் நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூரில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார், ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இவை திமுக ஆட்சியில், தமிழகத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது. சட்டமற்ற காடாக தமிழகத்தை மாற்றியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்னைகளைத் திசைதிருப்புவதை விட, இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.