மார்க்கெட் இழந்தவர்கள் ஃபேமஸ் ஆக பேசுவது..! ரஞ்சித் விமர்சனம் - அண்ணாமலை பதிலடி
இயக்குனர் பா.ரஞ்சித்தின் கருத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
ரஞ்சித் கருத்து
நேற்று பட விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், இன்று(22-01-24) மிக முக்கியமான நாள், இன்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நம்மை தீவிரவாதி என்பார்கள் என்று குறிப்பிட்டு, மிகவும் தீவிரமான ஒரு காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது என்றார்.இன்னும், 5, 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப்போகிறோம் என்பது நமக்குத் தெரியாது, பயமாக உள்ளது என்று கூறி, அந்த மாதிரி ஒரு காலக்கட்டத்தில் நாம் நுழைவதற்கு முன்பாக நம்மை நாமே பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ரஞ்சித் பேசியிருந்தார்.
மார்க்கெட் இழந்தவர்கள்
ராமர் கோவில் திறப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய நிலையில், அதற்கு இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக செய்தியாளர்களை சந்தித்த அவர், "திரைத்துறையில் மார்க்கெட் இழந்த சிலர் கவனத்தை ஈர்ப்பதற்காக அண்ணாமலை அல்லது பாஜகவினர் குறித்து பேசினால் கவனம் பெறலாம் என நினைக்கின்றனர் என்று விமர்சனம் செய்தார்.
ஆனால் தான் அது போன்றோர் குறித்து பேசவிரும்பவில்லை என்று தெரிவித்த அண்ணாமலை, கற்பூரம் ஏற்றவில்லை தீவிரவாதி என்பார்கள் என்பதை தானோ, பாஜகவோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்போ தெரிவிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.
தூங்கி எழுந்து கனவில் கண்ட விஷயங்களுக்கெல்லாம் பதில் கூறத்தேவையில்லை என்று பா.ரஞ்சித்தை சாடி, சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள் ஃபேமஸ் ஆக வேண்டும் என்று கூறும் கருத்துக்களுக்கெல்லாம் பதில் அளிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.