ஹிண்டன்பர்க்கிற்கு 1000 கோடி லாபம்; வருங்காலத்தில் இந்தியா மீது தாக்குதல் - அண்ணாமலை பரபரப்பு
இந்தியா வலிமையாக இருப்பதால் உலகளவில் பெரிய சதி நடக்கிறது என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், பனைவிதைகள் நடும் நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது, தேசியக்கொடியை கொண்டு செல்லும் பாஜகவின் இரு சக்கர வாகன பேரணிக்கு சட்ட ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. தி.மு.க.,வினருக்கு தேசியக் கொடி என்றாலே பிரச்னைதான்.
ஹிண்டன்பர்க்
ஹிண்டன்பர்க் நிறுவனம் இதற்கு முன்பு இது போல் ஒரு குற்றச்சாட்டை வைத்தது. அதை உச்சநீதி மன்றம் விசாரித்தது அதில்எந்த முறைகேடும் இல்லை என்ற நிலையில் ஹிண்டன்பர்க்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது ஹிண்டன்பர்க் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். இது போன்ற தகவல்களை பரப்பி முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தி, பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது.
வருகின்ற காலங்களில் இது போல் இந்தியா மீது நிறைய தாக்குதல் தொடுக்கப்படும். இந்தியா மிகவும் வலிமையாக இருக்கிறது. இதனால் உலகளவில் பெரிய சதி நடக்கிறது. அதில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லையெனில் இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்த ஹிண்டன்பர்க்கிற்கு அருகதை இல்லை. இது போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம். என பேசியுள்ளார்.