என்னை நானே சாட்டையால் அடித்து கொள்வேன்; இனி செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்
6 முறை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் FIR நகலில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள் சமூகவலைத்தளத்தில் வெளியானதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அண்ணாமலை
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் பேசிய அவர், திமுக எனும் போர்வை இருந்ததால்தான் இந்த குற்றவாளி அந்த பெண் மேல் கை வைத்துள்ளான்.
காவல்துறையினரைத் தாண்டி எப்படி அந்த FIR நகல் வெளியே வரும்? முதலில் இது ஒரு FIRஆ? படிக்காதவன் கூட ஒழுங்கா FIR எழுதுவான். மாணவிதான் குற்றவாளி போல அந்த FIRஐ எழுதியுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், மொபைல் எண், அப்பா பெயர், ஊர் பெயர் என அனைத்தையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களையும் வெளியிட்டு அந்த பெண்ணின் குடும்பத்தையே நாசம் செய்துவிட்டனர்.
சாட்டையடி போராட்டம்
தேசிய கட்சியினுடைய மாநில பொறுப்பாளர் பதவியில் இருப்பதால் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன். வீதிக்கு தனிமனிதனாக வந்தால் வேறு மாதிரியாக இருக்கும். நாளையில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே இருந்தும் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
நாளை என் வீட்டின் முன், என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்தப் போகின்றேன். நாளை முதல் 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். நாளை பாஜகவை சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நாளையில் இருந்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை, நான் செருப்பு அணியமாட்டேன். இதற்கு ஒரு முடிவு வந்தாக வேண்டும்" என பேசினார். செய்தியாளர் சந்திப்பின் முடிவில் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி கையில் எடுத்துக்கொண்டார்.