அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு; முதலமைச்சரே முழு பொறுப்பு - அண்ணாமலை ஆவேசம்
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
FIR நகல்
இவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர், அண்ணா பல்கலைகழக மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதானவர் என்றும் கூறப்படுகிறது. தற்போது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக உள்ள நிலையில், இந்த வழக்கின் FIR நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட எஃப்.ஐ.ஆர் விவரங்களை யாரும் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்ய முடியாதபடி முடக்கம் செய்துள்ளது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிகழ்வை கண்டித்து பாஜக மற்றும் அதிமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
முதல்வரே பொறுப்பு
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் திருமதி @DrTamilisai4BJP, @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர் திரு @KaruNagarajan, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை,…
— K.Annamalai (@annamalai_k) December 26, 2024
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பு. திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்" என தெரிவித்துள்ளார்.