கூச்சமாவே இல்லையா முதலமைச்சரே..? ஏன் இந்த நாடகம் - கொந்தளித்த அண்ணாமலை
திமுக அரசின் செயல்பாடுகளை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக செயல்பாடுகள்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள்,
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்துள்ள இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று, தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், version 2.0 என்று பொதுமக்களைப் பயமுறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழகத்தில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நிலவுகிறது. கனிமவளக் கொள்ளையைத் தடுத்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்தில் புகுந்தே தாக்கி, கொலையும் செய்த செய்திகள் இதே திமுக ஆட்சியில் தான் நிகழ்ந்தன.
அண்ணாமலை கண்டனம்
நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்களை எல்லாம், அங்கொன்றும், இங்கொன்றுமான தனிநபர் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் என்று எளிதாகக் கடந்து செல்ல, முதலமைச்சருக்குக் கூச்சமாக இல்லையா? நாகரிகமாக நடந்து கொள்கிறார்களாம். நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுப்பார்களாம்.
இப்படி எல்லாம் பேச உங்களுக்கே சிரிப்பு வரவில்லை முதலமைச்சரே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ஜாதியின் பெயரைச் சொல்லி பொது மேடையில் அவமானப்படுத்தியபோதும், இலவசப் பேருந்தில் பயணம் செய்யும் தாய்மார்களை ஓசி என்று அவமானப்படுத்தியபோதும், கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டு இருந்து விட்டு,
தற்போது விரைவில் தேர்தல் வரவிருப்பதால், நடவடிக்கை என்ற பெயரில் நீங்கள் நாடகமாடுவது தெரியாதா? உங்கள் தந்தையார் கலைஞர் கருணாநிதி, உங்களுக்காகவே ஒன்றை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். “ஓர் அமைச்சரவையில், தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது?
அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா?” தவறைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026ஆம் ஆண்டு தமிழக மக்கள் வழங்கப் போவது, படுதோல்வி மட்டுமே..” எனக் குறிப்பிட்டுள்ளார்.