பள்ளி மாணவர்களின் கல்வியில் ஏன் நேர்மையற்ற அரசியல்? அண்ணாமலை கண்டனம்
இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி, மக்களை ஏமாற்றுவீர்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்பில் மகேஷ்
மத்திய அரசு பள்ளிக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், " தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
கல்வித்துறை நிதி
இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு எந்த மாநிலத்திற்கும் இன்னும் விடுவிக்கவே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024 - 2025'ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 11, 2025
இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு… pic.twitter.com/G4uHbBtB9Y
அதில் "தமிழ்நாடு" இல்லை. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது அவர்கள் கைவிடவேண்டும்"எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை
அன்பில் மகேஷின் குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கல்வித் துறையை, ரசிகர் மன்றம் போல நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களுக்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
PMSHRI திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூறுவதில் வெறும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
பொய்யான குற்றச்சாட்டு
உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால், விவரம் அறிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும். பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும், வழங்கப்பட்ட நிதியும், அமைச்சர் பகிர்ந்துள்ள அறிக்கையிலேயே இருக்கிறது.
எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.