அரசியலில் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது - அண்ணாமலை பரபரப்பு பேச்சு
அரசியல் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியதாக அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலைக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு நடைபெற்றது.
இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தேர்தல் பணியாற்றிய கட்சியினருக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலை
இதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இதற்கு முன்னர் நான் ஒரு காவல் அதிகாரியாக பணியாற்றி உள்ளேன். அப்பொழுது கையில் சட்ட புத்தகம் இருக்கும். குற்றம் செய்தவர் அல்லது குற்றமற்றவர் என இரண்டு முடிவுகள் தான் என்னால் எடுக்க முடியும். ஆனால் அரசியவாதியாக மாறிய பிறகு கடந்த 3 ஆண்டுகள் கஷ்டமானவை. எனக்கு 40 வயது ஆகி விட்டது.
முதல் 37 ஆண்டுகள் எனது வாழ்க்கையில் முடிவெடுக்கும் அதிகாரம் எளிமையாக இருந்தது. கடந்த 3 ஆண்டுகள் தான் கஷ்டப்பட்டு ஒரு பதவியில் அமர்ந்துள்ளேன். பல நேரங்களில் இந்த அரசியலில் இருக்கணுமா என்று யோசிப்பேன். காரணம் மனதில் தினமும் சஞ்சலம் இருக்கும். சாதாரண மனிதர்களை போல் பேச முடியாது. இவர் சரி இவர் சரியில்லை என்று சொல்ல முடியாது. நம்மை பற்றி தவறாக ஒருத்தர் புரிந்து கொண்டு திட்டினால் கூட பொறுத்து கொண்டு தான் போக வேண்டும்.
பாஜக
நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து கூட உங்களை பற்றிய கருத்துகள் வரும் அதையும் பொறுமையாக கேட்டு கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சி வித்தியாசமான கட்சி. இந்த கட்சிக்காக பல தலைவர்கள் சொத்துக்களை இழந்துள்ளனர். தன்னுடைய செல்வம் நிம்மதி எல்லாம் இழந்து நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்கள்.
அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் ஆகிய மூன்று முக்கிய பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். கோயம்புத்தூரில் பாஜக தோல்வி என்று பார்க்க கூடாது. வெற்றி தள்ளி பொய் உள்ளது என்றே பார்க்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் பல சவால்களை கையாண்டது. அந்த அடிப்படையில் பாஜகவுக்கு கோயம்புத்தூரில் கிடைத்த 4,50,000 வாக்குகள் மிக மிக முக்கியமானவை." என பேசியுள்ளார்.