திமுகவுக்கு 24 மணி நேரம் தருகிறேன்; காலை 6 மணிக்கு அதை செய்வேன் - அண்ணாமலை சவால்
நேரம் இடம் சொன்னால் அண்ணாசாலைக்கு வருகிறேன் தடுத்து பாருங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கெட் அவுட் மோடி
சென்னையில் மும்மொழி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து, நேற்று முன்தினம்(18.02.2025) திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்த முறை தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயன்றபோது, தமிழக மக்கள் ‘Go Back Modi’ என துரத்தி அடித்தனர். மீண்டும் அதை முயற்சி செய்தால், இந்தமுறை ‘Go Back Modi’ கிடையாது, ‘Getout Modi’ என்று துரத்துவார்கள்,” என்று பேசியிருந்தார்.
அண்ணாசாலை
இதைத்தொடர்ந்து, நேற்று (19.02.2025) கரூரில், பாஜக சார்பில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் சரியான ஆளாக இருந்தால், அவர் வாயில் இருந்து ‘Get out Modi’ என்று சொல்லட்டும். உதயநிதி வீட்டுக்கு வெளியே, பாலிடாயில் பாபு என்று போஸ்டர் ஒட்டிவிட்டு வருவேன்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று(20.02.2025) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள். தனியார் பள்ளியில், இலவச உணவு, சீருடை எல்லாம் வழங்கப்படுவது இல்லை. அதனால், தனியார் பள்ளியை அரசுப் பள்ளியுடன் ஒப்பிடக்கூடாது" என கூறினார்.
கெட் அவுட் ஸ்டாலின்
இதனை தொடர்ந்து, இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இன்று சேலத்தில் இருக்கிறேன். தொடர்ந்து காசி தமிழ்ச் சங்கமம், கும்பமேளா என 26ஆம் தேதி வரை எனக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அடுத்த வாரம் சென்னைக்கு செல்லவிருக்கிறேன்.
அண்ணா சாலையில் எந்த இடம், எந்த நேரம், என்றைக்கு வர வேண்டும் என குறிப்பிட்டால், நான் மட்டும் தனியாக அங்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன். நீங்கள் திமுகவின் மொத்த படையையும், மொத்த காவல் துறையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள். உதயநிதி, 'கெட் அவுட் மோடி' என டுவிட் செய்துள்ளார்.
திமுகவின் ஐடி விங் மற்றும் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதை எவ்வளவு வேண்டுமானாலும் பரப்புங்கள். 24 மணி நேரம் தருகிறேன். நாளை காலை, 6:00 மணிக்கு, ஆட்சி செய்ய தெரியாத, குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாததால், 'Get Out Stalin' என டுவிட் போடுகிறேன். யார் அதிக டிவீட் போடுகிறார்கள் என பார்ப்போம்" என பேசினார்/