தைரியமிருந்தால் அண்ணாசாலைக்கு வரட்டும் - அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
அண்ணாமலை நிதியை பெற்று தராமல் பிரச்சனையை திசை திருப்புகிறார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் இருக்கு தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. அண்ணாமலை பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
அண்ணாசாலை வரட்டும்
தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் வாங்கித் தர முடியவில்லை. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். 2018ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, சுவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு திருட்டுத்தனமாகச் சென்றார்.
ஏற்கனவே அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. தனியார் பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை இதனுடன் தொடர்புபடுத்த வேண்டாம்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளி நடத்துபவர்கள் மத்திய அரசிடம் தகுந்த அனுமதி பெற்றே நடத்துகிறார்கள். தனியார் பள்ளியில் இலவச உணவு, சீருடை கொடுக்கிறார்களா? தனியார் பள்ளி நடத்துபவர்களை பாஜக தலைவர்கள் விமர்சிப்பதே தவறானது" என பேசினார்.