மு.க.ஸ்டாலினின் முதல்வர் பதவியை காப்பாற்றியுள்ளேன் - அண்ணாமலை பேச்சு
இருப்பில்லாத கட்சிகள்தான் விஜய்யை தங்கள் கூட்டணிக்கு அழைக்கின்றன என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
மதுரையில் FeTNA அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஜல்லிக்கட்டு நமது அடையாளத்தில் ஒன்று. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை காண தேசிய தலைவர்களை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
மாவட்ட ஆட்சியர்
அந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முன் வரிசையில் அமர வைத்தது தவறு. அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்பநிதியின் நண்பருக்காக மாவட்ட ஆட்சியர் ஒரு இருக்கை தள்ளி அமர வைக்கப்பட்டுள்ளார்.
எத்தனை பேர் கடினமாக படித்து தேர்வெழுதி இந்த பதவிக்கு வருகிறார்கள். அந்த இருக்கையை மாவட்ட ஆட்சியை விட்டுக்கொடுத்தது தவறு. அதற்கு நானாக தான் எழுந்து சென்றேன் என சொன்ன காரணம் அதை விட தவறு. அமைச்சர் மூர்த்தியிடம் உங்களின் இருக்கையை கொடுங்கள் என்று கூறி இருக்க வேண்டும்.
விஜய்
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் முதல்வர் பதவி விலகுவேன் என அறிவித்த பின்னர், அந்த திட்டம் கைவிடப்படும் நிலைக்கு வந்ததாக முதல்வர் பேசியிருந்தால், அவரின் பதவியை நானே காப்பாற்றிக்கொடுத்திருக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை இருக்கட்டும் என பாஜக வைத்துள்ளோம்.
இருப்பில்லாத கட்சிகள், இளைஞர்களை ஈர்க்க முடியாத கட்சிகள்தான் விஜய்யை தங்கள் கூட்டணிக்கு அழைக்கின்றன. செல்வப்பெருந்தகை விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கையில் 10% அவர்களின் தலைவர் ராகுல்காந்தி மீது வைக்க வேண்டும்" என பேசினார்.