பெரியார் பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது - சீமானுக்கு ஆதரவாக வந்த அண்ணாமலை
பெரியார் எந்த புத்தகத்தில் கூறியுள்ளார் என்ற ஆதாரத்தை நான் வெளியிடுகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், பெரியார் குறித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பேசினார் என பல்வேறு கருத்துக்களை சீமான் கூறிய நிலையில், சீமானின் பெரியார் குறித்த கருத்துக்கு ஆதாரம் கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
சீமான் மீது புகார்
மேலும், பெரியார் குறித்த பேச்சுக்கு சீமானின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர் பாபு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியயோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சீமான் பெரியார் குறித்த சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். பெரியார் அதை எந்த புத்தகத்தில் எந்த இடத்தில் கூறியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை நான் தருகிறேன்.
அண்ணாமலை ஆதரவு
போலீசார் வீட்டிற்கு வந்தால் சீமான் அண்ணன் அந்த ஆதாரத்தை கொடுத்தால் போதும். அதை பொதுவெளியில் பேச விரும்பவில்லை. பெரியார் பேசியதை பொது வெளியில் பேசினால் மக்களுக்கு அருவருப்பாக இருக்கும். அதை போன்று சில வார்த்தைகள் அதில் இருக்கிறது.
காலம் கடந்து விட்டது. அரசியல் மாறிவிட்டது. மக்கள் அரசியலை புதிய பார்வையில் பார்க்கிறார்கள். பெரியார் இதற்கு முன் பேசியதை எல்லாம் பொதுவெளியில் பேசினால் ரொம்ப தவறாக போய்விடும்." என பேசினார்.