காவேரி நதி நீர் விவகாரம்; தமிழக பாஜக போராட்டத்தில் இறங்கும் - அண்ணாமலை
காவேரி நதி நீர் விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் பேசியதாவது, “பி.எம்.கிசான் என்ற விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் 43 லட்சம் சிறு குறு விவசாயிகள் பதிவு செய்து இருந்தனர். இவர்களுக்கு இது வரை 17 தவணை வீதம் ரூ2000 வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த திட்டத்தில் 21 லட்சம் விவாசாயிகள் மட்டுமே பயனடைகின்றனர். இதில் மத்திய அரசுக்கு பழிச்சொல் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா? அல்லது போலி விவசாயிகளை பதிவு செய்து அதன் பேரில் பயனடைந்த அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது? என்பதற்கு முறையான பதிலை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.
காவிரி நீர்
தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை அதை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஜூலை 26ம் தேதி போராட்டம் நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் ஒரு சொட்டு கூட பாக்கி இல்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. மேகதாதுவில் அணை கட்டுவதாக பிரச்சனை கிளம்பிய பிறகுதான் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. தற்போது கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. எனவே விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியும் பங்கேற்கும்.
கர்நாடக அரசு
இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டின் உள்ள அரசியல் கட்சியினர் கர்நாடகாவிற்கு சென்று அங்குள்ள முதல்வர் சீதாராமையாவிடம் சமரசம் பேசி, தமிழக விவசாயிகளின் நலனுக்காக தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். அதற்காக கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்திலும், அதற்காக நடத்தப்படும் போராட்டங்களிலும் பங்கேற்க தமிழக பாஜக தயாராக உள்ளது.
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு விதண்டாவாதமாக பேசி, நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண விடாமல் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ முதல்வரோ காங்கிரஸ் எம்பி எம்.எல்.ஏக்களோ கர்நாடகாவுக்கு சென்று கர்நாடகாவுக்கு சென்று முதல்வர் சித்த ராமையாவை சந்தித்து பேசவில்லை. அடிப்படை முயற்சிகளையும் செய்யாமல், சதி நடப்பதாகவும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று கூறுவதும் எந்த விதத்தில் ஏற்புடையது இல்லை என பேசியுள்ளார்.