தமிழக பாஜக தலைவர் மாற்றம்? அண்ணாமலை பளீச் பதில்
நான் தொண்டனாக வேலை செய்யவும் தயார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
டெல்லியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்துக்கு மிக முக்கியமான தேர்தல். கூட்டணிக்கான நேரம், காலம், அவகாசம் இன்னும் நிறைய இருக்கிறது. அதனால் கூட்டணியை பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், அதற்கான அடிமட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மோதல் போக்கு இல்லை
அதிமுகவுடன் எந்த மோதல் போக்கும் இல்லை. நான் என் கட்சியை வளர்ப்பதற்காக தான் உழைக்கிறேன். நான் தொண்டனாக வேலை செய்யவும் தயார். என்னால் யாருக்கும் தொந்தரவு வராது. எங்களுடைய எதிரி திமுக மற்றும் திமுக கூட்டணிதான். அவர்கள் ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும்.
கட்சி தொடங்கி ஒன்றறை ஆண்டில் மூன்று முறை மட்டுமே விஜய் வெளியே வந்துள்ளார். வீரவசனம், வாய் சவடால், சினிமா வசனம் பேசாமல், களத்தில் வேலை செய்து, மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்து, மக்களோடு மக்களாக நிற்க வேண்டும். மைக் எடுத்து பேசிவிட்டு, கை காட்டி விட்டு போவது அரசியல் அல்ல. களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல்.
விஜய்க்கு அரசியல் புரிதல் இருக்க வேண்டும். லாட்டரியில் வந்த பணத்தை வைத்து ஒருவர் திமுகவுக்கு வேலை செய்தார். பின்னர் அதே லாட்டரி பணத்தின் மூலம், விசிகவுக்கு சென்று, தற்போது தவெகவுக்கு தாவியிருக்கிறார். அவருடையை இலக்கு தவெகவை லாட்டரி விற்பனை கழகம் என மாற்றுவதாக தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.