விளையாட்டுத்துறை பற்றி உதயநிதிக்கு புரிதல் இருக்கா? அண்ணாமலை ஆவேசம்!
தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் .. 2024 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவை, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்.அதில், பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பை, 12 முதல் 19 வயது வரை ஒரே பிரிவில் வைத்திருக்கிறார்கள்.
இது, தேசிய விளையாட்டு கூட்டமைப்பு வகுத்துள்ள வயது வரம்பு பிரிவுகளான, 11 - 14 வயது, 14 - 17 வயது, 17 - 19 வயது என்பதற்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி, 12 வயது பள்ளிச் சிறுவனை, 19 வயது சிறுவனோடு ஒரே பிரிவில் போட்டியிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்பது, முட்டாள்தனமும் கூட.
இதனால், ஒத்த வயது போட்டியாளர்களோடு போட்டியிடும் சமவாய்ப்பின்றி இளஞ்சிறுவர்கள் ஏமாற்றமடைவதோடு, இளம் வயதிலேயே மனதளவில் தளரவும் வாய்ப்பு உள்ளது. இது விளையாட்டுத் துறையில் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
புரிதல் இருக்கா?
பள்ளி மாணவர்களை, வயது வரம்பின் அடிப்படையில் மூன்று பிரிவாக வகைப்படுத்துவதை விட்டுவிட்டு, 12 - 19 வயது வரை ஒரே பிரிவாக அறிவித்திருப்பது, உண்மையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதிக்கு, தனது துறை குறித்த புரிதலோ, இந்த விளையாட்டுப் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்ற தெளிவோ இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில், விளையாட்டுத் துறையின் நோக்கத்தையே சீர்குலைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.உடனடியாக, திமுக அரசு அறிவித்திருக்கும், பள்ளி மாணவர்கள் 12 - 19 வயது வரை ஒரே பிரிவு என்ற அறிவிப்பை மாற்றி,
தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு வகுத்திருக்கும் அடிப்படையான விதிமுறையின்படி, தமிழக முதலமைச்சர் கோப்பை 2024 பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும்,
விளையாட்டுத் துறையில் சாதிக்கும் திறமையும் ஆர்வமும் கொண்ட பள்ளி மாணவர்கள் கனவினை, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சிதைத்து விட வேண்டாம் என்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.