தப்புன்னா சுட்டிக்காட்டுங்க, அவங்க எதிர்பார்ப்பதை எல்லாம் பேசமுடியாது - அண்ணாமலை பளீச்!
அதிமுகவின் கண்டனத்திற்கு அண்ணாமலை தற்போது பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டனம்
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி குறித்து பேசி கண்டனம் தெரிவித்தனர். அது குறித்து அண்ணாமலை பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "எனக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன். அதுமட்டும் அல்லாது நேற்று மற்றும் இன்று காலை முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர், நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்திருந்தனர்.
அவர்களைப் போன்று தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் தமிழக பாஜகவின் சகோதர சகோதரிகளுக்கும் சிலவற்றை தெளிவுபடுத்துவது என் கடமையாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அறிக்கை
இதனை தொடர்ந்து, அந்த அறிக்கையில், "கூட்டணி கட்சியையும், கூட்டணி தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதை கூறியிருக்கிறேன்.
மேலும், ஆங்கில நாளேடுக்கு நான் கொடுத்திருந்த பட்டியில் உண்மைக்கு புறம்பாக ஏதேனும் கருத்துக்களை கூறியிருந்தேன் என்று யாராவது நினைத்தால் அந்த தவற்றை சுட்டிக் காட்டி தெளிவுபடுத்தினால் அதனை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
அதேசமயம் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணி கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது" என்று அதில் கூறியுள்ளார்.