அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் : கொந்தளித்த ஜெயக்குமார்
ஜெ.பி.நட்டாவும், அமித்ஷாவும் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அண்ணாமலைக்கு முன்பிருந்த பாஜக தலைவர்கள் கூட்டணி தர்மத்தி தை மீறும் வகையில் பேசியதில்லை. மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
ஜெயக்குமார் கொந்தளிப்பு
மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்ற எண்ணத்திலேயே அண்ணாமலை செயல்படுவது போல் தெரிகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, விமர்சனம் செய்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது; ஜெ.பி.நட்டாவும், அமித்ஷாவும் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும்.
அண்ணாமலை கர்நாடகா சென்ற ராசி அம்மாநிலத்தில் பாஜக தோற்றுவிட்டது. அண்ணாமலையின் செயல்பாடுகள் அதிமுக பாஜக கூட்டணி தொடரக்கூடாது என்பது போல தான் உள்ளது. தமிழக சட்டமன்றத்துக்குள் 20 வருடங்களாக பாஜகவால் நுழைய முடியவில்லை. அண்ணாமலையும் செயல்பாடுகள் இப்படி தொடர்ந்தால் பாஜக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும். அண்ணாமலையில் பேச்சால் 2 கோடி பாஜக தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.