பாஜக கூட்டணியிலிருந்து விலகும் பாமக? அண்ணாமலை சொன்ன பதில்
பாஜக கூட்டணியிலிருந்து பாமக விலக தயார் என அறிவித்தது தொடர்பாக அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பாமக ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்களை கடந்த நிலையிலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
அமைச்சர் சிவசங்கர்
அப்போது பேசிய அவர், "திமுக வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம். மேலும் வன்னியர் என்ற காரணத்தால் தான் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை" என பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், தேர்தல் வந்தால்தான் பாமக இட ஒதுக்கீடு பிரச்சனையை கையில் எடுக்கிறது. இட ஒதுக்கீட்டையே ஒழிக்க நினைக்கும் பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு இதை பேசுவது தேர்தல் நாடகம். ஜிகே மணி, ஏ.கே.மூர்த்தி என பாமகவில் உழைத்தவர்கள் பலர் இருக்கும் போது அன்புமணி ராமதாஸ் மட்டும் ஏன் தலைவராக நியமிக்கப்பட்டார் என கேள்வி எழுப்பினார்.
ஜி.கே.மணி விளக்கம்
அமைச்சருக்கு பதிலளித்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பாஜக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறினால் இப்போது உள்ள தடைகள் உடனடியாக விலகி விடுமா? திமுக 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் நாளையே பாஜக கூட்டணியிலிருந்து விலக தயார்.
பா.ம.க.விலிருந்து கேள்வி எழுப்பினால் தி.மு.க.விலிருந்து வன்னியரை வைத்து பதில் சொல்வதை கலைஞரை தொடர்ந்து ஸ்டாலினும் செய்கிறார். நான் 25 ஆண்டுகளாக பாமக தலைவர் பதவியில் இருந்தேன்" என கூறினார்.
அண்ணாமலை பதில்
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மருத்துவர் ராமதாஸ் அவர்களும், அண்ணன் அன்புமணி அவர்களும் ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள். எல்லா கட்சிக்கும் அந்த கொள்கையை அடைய விருப்பம் இருக்கும். அவர்களின் அரசியல் பயணத்தில் உச்சபட்ச விஷயமாக இதை பார்க்கிறார்கள்.
அவர்கள் கேட்டதில் எந்த தவறும் இல்லை. விகிதாச்சார அடிப்படையில் எல்லா சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். திமுக பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது" என பதிலளித்தார்.