திமுகவிற்கு ஆதரவு தர தயார் - நிபந்தனை விதித்த அன்புமணி ராமதாஸ்
திமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பாமக ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்களை கடந்துவிட்ட நிலையிலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
சமூக நீதிப் பிரச்சனை
அதை தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் கிடையாது. அதற்கான தரவுகளை சேகரித்து வழங்கலாம் என தெளிவாக கூறியுள்ளது.
ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 1000 நாட்கள் கடந்தும் திமுக அரசு தூங்கிக் கொண்டுள்ளது. இது ஏதோ ஒரு சாதி பிரச்சனை கிடையாது. சமூக நீதிப் பிரச்சனை. பெரிய சமுதாயம் வளரக்கூடாது என திராவிட கட்சிகள் சூழ்ச்சி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் எந்தெந்த ஜாதி எவ்வளவு உள்ளது என தெரிந்துவிடும் அதனால் இத்தனை சீட்டுகள் வேண்டும் என கேட்கும் என்ற பயம் திமுக அரசுக்கு உள்ளது.
திமுகவிற்கு ஆதரவு
திமுக வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம். 15 விழுக்காடு கையெழுத்து போடுங்கள், நிபந்தனை வேண்டாம். சீட்டு எதுவும் வேண்டாம். அப்படி செய்யவில்லை என்றால், வீடு வீடாக சென்று ஸ்டாலின் வன்னியர் விரோதி என்று பிரச்சாரம் செய்வோம்.
திமுக முதல் தேர்தலில் போட்டியிட்டு 16 இடங்கள் வெற்றி பெற்ற போது, அது அனைத்தும் வட தமிழகத்தில் தான் வெற்றி பெற்றது . திமுகவை வாழ வைத்தது வன்னியர்கள்தான். திமுகவிற்காக அதிகம் உழைத்தவர் துரைமுருகன்தான்.அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாமே. அவர் வன்னியர் சமுதாயம் என்பதால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கவில்லை" என பேசினார்.