ஆன்லைன் ரம்மி தடை மசோதா: ஆளுநர் ஏன் திருப்பி அனுப்பினார் - அண்ணாமலை
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. அது தொடர்பாக சில விளக்கம் கேட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். இந்நிலையில், மீண்டும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார்.
அண்ணாமலை விளக்கம்
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பிழையான மசோதாவை இயற்றி, ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரை நிர்ப்பந்திக்கூடாது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட தடை மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காகவே ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பார்.
மசோதா திருப்பி அனுப்பப்பட்டதற்காக ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.