சிலையெல்லாம் உடைக்க மாட்டோம்...ஆனா..? புதிய விளக்கம் கொடுத்த அண்ணாமலை!!
ஸ்ரீரங்கத்தில் இறைவனை நம்புகிறவன் முட்டாள் என்ற வாசகம் உள்ள கம்பத்தை நீக்குவோம் என தெரிவித்த அண்ணாமலை, நேற்று அதற்கு புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அண்ணாமலை கருத்து
திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஸ்ரீரங்க கோவிலுக்கு வெளியே இறைவனை நம்புகிறவன் முட்டாள் என்ற வாசகம் பொருந்திய வாசகத்தை முதலில் நீக்குவோம் என அதிரடியாக கருத்தை தெரிவித்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், அது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய விளக்கம்
இந்நிலையில், இது குறித்து நேற்று அண்ணாமலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தமது நடைப்பயணத்தை மேற்கொண்டார். காந்தி மார்க்கெட்டில் தமது மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை நிறைவுசெய்த அவர், அங்கு பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, ''திமுக காரர்கள் கேட்கிறார்கள் அந்த சிலையையும் வாசகத்தையும் எங்கே கொண்டுபோய் வைப்பீர்கள் என்று, சிலையை உடைக்கும் அளவுக்கு இங்கு யாரும் கேவலமானவர்கள் கிடையாது. சிலையாக இருந்தாலும் சரி வாசகமாக இருந்தாலும் சரி பொது இடத்தில் எங்கே இருக்க வேண்டுமோ அங்கு வைப்போம். எல்லா சிலைகளும் பொது இடத்தில் வைப்போம்'' என்றார்.