ஒரே நாடு ஒரே தேர்தல்.. தமிழ்நாட்டில் அமலாகுவது எப்போது? அண்ணாமலை விளக்கம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் தமிழ்நாட்டில் எப்போது அமலாகும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று அந்த மசோதா அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா எப்போது கொண்டு வரப்பட உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எடுத்துக்காட்டாக வரும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் வரவிருக்கிறது.
அதில் தேர்வாகும் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். இதைத் தொடர்ந்து 2031-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பொறுப்பேற்கும் ஆட்சி, 2034 வரை மட்டுமே இருக்கும். அதாவது 2034ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் தமிழ்நாட்டில் அமலாகும்.
எப்போது?
இதற்கிடையே, ஆட்சி கலைக்கப்பட்டால் 5 ஆண்டுகள் இடைவெளியை நிரப்பும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமையும். இதன் மூலம் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு தொந்தரவில்லை. யாருக்கும் எதிராகவும் கொண்டு வரப்படவில்லை.
இதை அரசியல் கட்சியினர் தவறாக புரிந்துள்ளனர், திரித்து பேசுகின்றனர்.1951, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தான் நடைபெற்றது. அதன் பிறகு சில ஆட்சிகளை காங்கிரஸ் கலைத்ததால் தான் தேர்தல் நேரமும், காலமும் மாறியது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வளர்ச்சி அரசியல் உருவாகும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்துக்கு மக்களின் வரவேற்பும் உள்ளது.இது ஜனநாயக முறைப்படி கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிகிறது. அப்படியானால் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடும். எனவே, மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.