விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? அண்ணாமலை விளக்கம்
டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல், 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
1998ஆம் ஆண்டு, கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, 27-ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்விற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலையிடம் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எல்லா கட்சியினரையும் போல தான் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு பாதுகாப்பு
பாஜகவுக்கு சார்ந்தவரா? சாராத நபரா? என்பதெல்லாம் விஷயமல்ல. எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கும் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
பாஜகவை எதிர்த்தாலும் உரிய பாதுகாப்பு வாங்கப்படும். தமிழக அரசு ஏன் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை? விஜயால் ஆளுநரை சந்திக்க வர முடியவில்லை, பரந்தூர் மக்களை சந்திக்க செல்ல முடியவில்லை. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும், இதில் அரசியல் செய்ய நினைத்தால் அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று அர்த்தம்.
பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்” என பதிலளித்தார்.