அவதூறு போஸ்டர் - அண்ணாமலை உதவியாளர் கைது
மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்ட சொன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதூறு போஸ்டர்
வட சென்னை பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வண்ணம் கடந்த 11ஆம் தேதி போலி பத்திரிகை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக திமுகவினர் தரப்பிலிருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் வண்ணார்பேட்டையை சேர்ந்த பிலிப்ராஜ், இந்து ஜனநாயக முன்னணி சென்னை மாநகர செயலாளர் சத்யநாதன், சிவகுருநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
உதவியாளர் கைது
இதில் சிவகுருநாதன் முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் 5 ஆயிரம் போஸ்டர்களை சிவகாசியில் அச்சடித்து அவற்றை வழங்கறிஞர்கள் இருவரின் உதவியோடு, சத்யநாதன், பிலிப்ராஜ் ஆகியோருக்கு அனுப்பி வைத்து சென்னையில் ஓட்டியது விசாரணையில் தெரிவந்தது.
இந்த போஸ்டர்களை தமிழக பாஜக தலைவர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதன் பேரில் ஒட்டப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமார் முருகனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
பின்னர் அடையாறில் உள்ள அவருக்கு சொந்தமான அரசியல் ஆராய்ச்சி மையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.