பிரதமர் கையால் பட்டம் பெறுவது பெருமை..அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் உரை
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை ஆற்றினார்.
பட்டமளிப்பு விழா
ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின்
பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது.
பிரதமர் கையால் பட்டம்
எனினும் நீண்ட காலமாக 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேதி கொடுத்த பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது நடக்கும் பட்டமளிப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை ஆற்றினார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் கையால் மாணவர்கள் பட்டம் பெறுவது பெருமைமிகு தருணம் ஆகும்.
வேலைவாய்ப்பு
பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்தவும்தான். பண்டைக் காலம் தொட்டு தமிழர்கள் எப்போதும் தொழில்துறையில் சிறந்து விளங்குகின்றனர். படித்து பட்டம் பெறுவோருக்கு வேலைவாய்ப்பு தரும் சூழலை உருவாக்குகிறோம்.
பழமைவாத கருத்துகளை புறம்தள்ளி புதிய கருத்துகளை மாணவர்கள் ஏற்க வேண்டும் என கூறினார்.