செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி - பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணியிலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்புத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் விஸ்வநாதன் ஆனந்த். அதன் பின்னர், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உரை நிகழ்த்துகையில், வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. இருந்தோம்பி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற குறளை குறிப்பிட்டு பேசினார்.
துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகமாகும். தமிழகத்திற்கும், சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்திலிருந்து பல கிராண்ட்மாஸ்கர்கள் உருவாகியுள்ளனர் என்று பேசினார்.