11 ஆண்டுகள் மனைவியை வீட்டுக்குள் அடைத்து சித்ரவதை - வக்கீல் கொடூரம்
கணவன், மனைவியை 11 ஆண்டுகளாக இருட்டுக்குள் அடைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி சித்ரவதை
ஆந்திரா, விஜயநகரத்தைச் சேர்ந்தவர் மதுசூதனன். வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாய் சுப்ரியா. 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தாய் உமா மகேஸ்வரி மற்றும் உடன்பிறப்புகள் பேச்சைக் கேட்டு மனைவியை கொடுமை படுத்தியுள்ளார்.
11 ஆண்டுகளாக மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒரு இருட்டு அறையில் அடைத்து முடக்கி வைத்திருந்தார். அவரது பெற்றோர் பலமுறை முயன்றும் மகளுடன் பேச அனுமதிக்கவில்லை. நேரடியாக பார்க்கவும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அவரது பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர்.
வக்கீல் கொடுமை
அதன்படி அவர்கள் வீட்டிற்கு வந்தபோதும் என்னுடைய வீட்டுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி உள்ளதா, என் வீட்டுக்கு நீங்கள் எப்படி வரலாம் என்று விரட்டியுள்ளார். மேலும், நீதிமன்ற அனுமதியிடன் வந்து வீட்டிற்குள் புகுந்த போலீஸார் தனி அறையில் அடைப்பட்டு கிடந்த சாய் சுப்ரியாவை மீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
மிகவும் மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சாய் சுப்ரியாவை பார்த்த நீதிபதி அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க உத்தரவிட்டார்.
மேலும் அவரது கணவர் மனித உரிமை ஆணையத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.