"அந்தகன் " படத்திற்கு அடுத்தடுத்து விழும் அடி..இயக்குனரும் படத்தில் இருந்து விலகல்
அந்தகன் படத்தை இயக்குவதாக கூறப்பட்ட இயக்குனர் ஜேஜே பெட்ரிக் படத்தில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. இந்த படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் தயாராகி வந்தது. இந்த படத்தில் நடிகர் பிரசாந்த்,கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழில் இந்த படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெட்ரிக் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் விலகுவதாக தெரிவித்துள்ளார், “அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தகன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, விரைவில் எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.