அது மட்டும் நடந்தால் தமிழ்நாடு கலவரபூமியாக மாறும் - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவில்லையென்றால் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை உள்ளது என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு
பாமகவின் வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அன்புமணி ராமதாஸ்
இந்த நிகழ்வில் பேசிய அன்புமணி ராமதாஸ், "மேடையில் உள்ள நாங்கள் அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தாலும், சமூகநீதி என்ற கருத்தின் அடிப்படையில் இங்கு ஒன்றுகூடி உள்ளோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீடுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார்.
தமிழ்நாட்டில் விரைவாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தின் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு 50 சதவீத இட ஒதுக்கீடாக குறைக்கப்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம், தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்.
தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பறவைகள், ஆமைகள் எவற்றிற்கெல்லாமோ கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்களின் நிலை குறித்து அறிந்துகொள்ளவும், அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் அவர்களை முன்னேற்றவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.
பொய் சொல்லும் முதல்வர்
அதனை எடுக்க நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு எடுக்க மறுக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சட்டம் தான் உள்ளது. பீகார் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்றால் அது தமிழ்நாட்டில் சாத்தியம் தானே?
தமிழக முதல்வர் மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்லி வருகிறார். மத்திய அரசு விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க உள்ள நிலையில், அதனோடு சேர்த்து இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்.
மாபெரும் போராட்டம்
தமிழ்நாட்டில் எந்தெந்த சாதி எவ்வளவு உள்ளது என்ற அனைத்து விவரங்களும் திமுகவிடம் உள்ளது. ஆனால் அந்த விவரங்களை ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எந்தெந்த சாதியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தால், அதன் பிறகு அந்தந்த சாதியினர் தேர்தலில் போட்டியிட கூடுதலாக சீட்டு கேட்பார்கள் என்பதனால் திமுக இதனை எடுக்க மறுக்கிறது.
தமிழக அரசு விரைவாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும். முதற்கட்டமாக சென்னையில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றால் அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் பல கட்ட போராட்டம் நடத்தப்படும்” என பேசினார்.