இது மிக மோசமான உழைப்புச் சுரண்டல்..முடிவை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி !
1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாத கவுரவ விரிவிரையாளர் நியமனத்தை மேற்கொள்வது சமூகநீதிக்கு எதிரானது; தமிழக அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை;
அந்தந்த கல்லூரிகளின் முதல்வர்கள் அவர்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்து கொள்வதால் சமூகநீதி படுகொலை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.833 என்ற குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.
இது மிக மோசமான உழைப்புச் சுரண்டல் ஆகும். நிரந்தரமான உதவிப் பேராசிரியர்களை நியமிப்பது ஒன்று தான் இதற்கு தீர்வாகும். பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசின் நிதி நெருக்கடி காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கைவிட வேண்டும்?
இது தொடர்பாக அரசிடம் பா.ம.க. பலமுறை வினா எழுப்பிய போதிலும் சரியான பதில் கிடைக்கவில்லை. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நிதி நெருக்கடி என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடாது.
கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்மேலாண்மை ஆகிய துறைகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள நிதி தான் பிற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.அரசு கலை மற்றும் கல்லூரிகள் முடங்குவதைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே, 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த காலியிடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரித்து, ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தேர்வுகளை உடனடியாக நடத்தி அந்த இடங்களுக்கு நிரந்தர உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.