செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்க - அன்புமணி ஆவேசம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிகவளாகங்களில் மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரங்களை அறிமுகம் செய்வது மதுவணிகத்தை ஊக்குவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டிற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளிக்க இயலாத அமைச்சர் செந்தில் பாலாஜி,
வேண்டுமென்றால் அன்புமணி நாடாளுமன்றத்தில் பேசி நாடு முழுவதும் மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வரலாமே? என்று தம்மைத்தாமே அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எதிர்வினா எழுப்பியிருக்கிறார். அவரது அறியாமையை எண்ணி நான் வருத்தமடைகிறேன். ஆக்கப்பூர்வமாக செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும் நிலையில்,
அன்புமணி ஆவேசம்
அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிகவளாகம் ஒன்றின் எலைட் டாஸ்மாக் மதுக்கடையில் அமைக்கப்பட்டுள்ள மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரத்தை பார்வையிட்ட தமிழக அரசின் அமைச்சர் செந்தில் பாலாஜி, தானியங்கி எந்திரங்களுக்காக தமிழக அரசு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்றும்,
மது நிறுவனங்கள் தான் அவற்றை இலவசமாக வழங்கின; அதைத் தான் டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துகிறது. இப்படி ஒரு விளக்கத்தை அளித்ததற்காக அவர் வெட்கப்பட வேண்டும். ஆனால், இப்படி ஒரு மதுவிலக்குத்துறை அமைச்சரை பெற்றிருக்கிறோமே? என்று தமிழ்நாட்டு மக்கள் தான் வெட்கப்பட வேண்டியிருக்கிறது. மது ஆலைகளின் லாபம் அதிகரிப்பதற்காக மது வணிகம் பெருகுவதையும் ஆதரிக்கிறார் என்று தான் பொருள்.
அப்படியானால் செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா? மது விற்பனைத்துறை அமைச்சரா? தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்வது குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதைத் தான் மக்கள் நல அரசு மதிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி விட்டு, சமூகப் பொறுப்பு மிக்க ஒருவரை அமைச்சராக்கி அவரிடம் மதுவிலக்கை ஏற்படுத்தும் பொறுப்பை முதல்வர் ஒப்படைக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.