ஐபிஎல் போட்டிகளில் இதனை தடை செய்ய வேண்டும்..மீறினால் சிறை - அன்புமணி கோரிக்கை
ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள்
அன்புமணி ராமதாஸ் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா விளையாட்டு தேசம் என்பதால், ரசிகர்களின் விளையாட்டு மோகத்தை பயன்படுத்தி, அவர்களிடம் புகையில்லா புகையிலைப் பொருட்கள் விளம்பரம் வழியாக திணிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இந்தியாவில் மிகப்பிரபலமான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட் தான்.
இந்திய ஒலிபரப்பு வாடிக்கையாளர் ஆய்வு நிறுவனத்தின் 2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் 76.6 கோடி பேர் விளையாட்டுகளை தொலைக்காட்சிகள் மூலம் பார்க்கின்றனர். அவர்களில் 93% பேர் கிரிக்கெட்டை பார்க்கிறார்கள். அவர்களில் 52% பேர் 30 வயதுக்கு கீழான இளைஞர்கள் ஆகும். 2019 ஐபிஎல் போட்டிகளின் போது மட்டும் 10,452 முறை ‘பான் மசாலா, சர்தா, குட்கா’ஆகிய புகையற்ற புகையிலை விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
புகையிலை விளம்பரம்
ஐபிஎல் போட்டிகளின் போது மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் பட்டியலில் இது மூன்றாவது இடத்தில் வந்துள்ளது. எனவே, கிரிக்கெட் போட்டிகள் மூலம் மேற்கொள்ளப்படும் புகையற்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் அனைத்தும் சட்டவிரோதம் ஆகும். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேற்படி சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் ஐந்து ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, 2023 ஏப்ரல், மே மாதங்களில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் போது புகையற்ற புகையிலைப் பொருள் (Smokeless Tobacco) விளம்பரங்கள் காட்சிப் படுத்தப்படுவதும், அவை தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். அதனை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.