தலித் சமுதாயத்தை சார்ந்தவரை முதலமைச்சராக்குவோம் - அன்புமணி ராமதாஸ்
தலித் சமுதாயத்தை சார்ந்தவரை முதலமைச்சராக்குவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கீழ்சிவிரி கிராமத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 78 வருடம் ஆகிறது. ஆனால் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. தரமான கல்வி, சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் உண்மையான சுதந்திரம். ஆட்சிக்கு வரும் முன் ஆட்சியாளர்கள் நிறைய வாக்குறுதிகள் தருகிறார்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எதனையும் கண்டு கொள்வதில்லை என பேசினார்.
பட்டியலின முதல்வர்
தலித் சமூகத்தை சார்ந்தவர் முதல்வர் ஆக முடியாது. ஆனால் திமுகவின் மேல் நம்பிக்கை உள்ளது என திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒட்டு மொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் ஆக்குவோம்.
இது வெறும் பேச்சு அல்ல. எங்களுக்கு முதன் முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவுடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குதான் அந்த பதவியைக் கொடுத்தோம். பாட்டாளி மக்கள் கட்சிதான் பட்டியலின மக்களுக்கு அதிகமாக செய்துள்ளது. நாங்கள் 1998 ஆம் ஆண்டு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோம். ஆனால் திமுக 1999 ஆம் ஆண்டு தான் ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கியது.
மத்திய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவார்கள் அதற்கு முன்பாக சர்வே எடுக்க வேண்டும் மத்திய, மாநில அரசை வலியுறுத்தி வருகிறோம். அரசியல் காரணத்திற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளது என தெரிவித்தார்.