திமுக முதலாளிகளின் பக்கம் உள்ளது; பாமக உழவர்களின் பக்கம் - அன்புமணி ராமதாஸ்
பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமானநிலையம் அமைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் தமிழ்நாட்டில் இப்படி ஒரு உழவர் மாநாடு நடந்தது கிடையாது. இந்த மாநாடு உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவே நடத்தப்படுகிறது.
திமுக முதலாளிகளின் பக்கம்
டெல்லியில் 2, 3 மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள். அதேபோல், இத்தனை விவசாயிகளும் சென்னை நோக்கி சென்று உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள். அதுதான் என் ஆசை. விவசாயிகள் சோறு போடும் கடவுள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்?
மருத்துவர் ராமதாஸ் அடிப்படையில் ஒரு விவசாயி. இந்த 45 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றினால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும். ஆனால் திமுக அரசு, 37 சதவீதம் இருக்கின்ற முதலாளிகளின் பக்கம் உள்ளது. மீதமுள்ள 63 சதவீதம் இருக்கின்ற உழவர்களின் பக்கம் பாமக உள்ளது.
பரந்தூர் விமான நிலையம்
பாமகவின் போராட்டங்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பரந்தூரில் விவசாய நிலையத்தில் விமான நிலையம் வரக்கூடாது. திருப்போரூர் அருகில் 5000 ஏக்கரில் உப்பளம் உள்ள பகுதியில்தான் விமான நிலையம் அமைய வேண்டும். வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட விவசாயிகளை சிறைப்பிடித்து குண்டர் சட்டம் போடவில்லை.
ஆனால், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்தது திமுக அரசுதான். விளைபொருள் கொள்முதல் ஆணையத்தை உருவாக்க வேண்டும். அனைத்து விளைப் பொருட்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்" என பேசினார்.