பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?அப்பட்டமான இரட்டை வேடம் - அன்புமணி அட்டாக்!
காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறிவிடக் கூடாது என்று பாமக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக
ஆளுனரைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக நேற்று பிற்பகல் 2.48 மணிக்கு தான் திமுக அறிவித்தது. அதன் பின்னர் நேற்று முன்னிரவில் தான் போராட்டத்திற்கு அனுமதி கோரி திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதையேற்றுக் கொண்டு அடுத்த சில நிமிடங்களில் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
திமுகவினரின் போராட்டங்களின் போது பல இடங்களில் விதிமீறல்கள் நடந்தாலும் கூட அதற்காக எவரும் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறையின் இந்த அப்பட்டமான இரட்டை வேடம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திமுகவினரின் போராட்டத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எவரேனும் நீதிமன்றத்திற்கு செல்வார்களோ, நீதிமன்றம் தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரமாக காலை 10.00 மணிக்கு பதிலாக காலை 9.00 மணிக்கே சென்னை சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதனால் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு அனுமதி கோரி 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அந்த நியாயங்கள் அனைத்தும் திமுகவின் போராட்டங்களுக்கும் உண்டு.
காவல்துறை
ஆனால், பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, திமுக போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களுக்கு மட்டும் அஞ்சி நடுங்கி அனுமதி தர வேண்டுமா? என்றெல்லாம் மக்கள் வினா எழுப்புகிறார்கள். அவற்றுக்கு காவல்துறையும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும்.
காவல்துறை என்பது மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அது பாமகவுக்கு காவல்துறை என்றால், திமுகவுக்கும் காவல்துறையாகத் தான் இருக்க வேண்டும். தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிடக் கூடாது. பாமகவுக்கு ஒரு நீதியையும், திமுகவுக்கு ஒரு நீதியையும் காவல்துறை கடைபிடிக்கக்கூடாது.
திமுக அரசின் அதிகாரக் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் காவல்துறை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் பாடம் புகட்டுவார்கள் என வலியுறுத்தியுள்ளார்.