வேலைவாய்ப்பு பெற்ற 5 லட்சம் பேரும் தமிழர்கள் தானா?திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்- அன்புமணி!
தவறான புள்ளிவிவரங்களை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்வதற்காகவும் தமிழக மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசுத்துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், தனியார் துறையில் ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அதில் 10% மட்டும் தான் தமிழக அரசு எட்டியிருக்கிறது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும் ஐயத்துக்கு அப்பாற்பட்டவையாக இல்லை. தமிழகத்தின் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாக மக்கள் மனதில் நிலவும் ஐயங்களைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
எனவே, உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 பேருக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் தன்மை, தனியார் துறையில் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் எங்கெங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டன? எந்த வகையான தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன?
அன்புமணி
வேலைவாய்ப்பு பெற்ற 5 லட்சம் பேரும் தமிழர்கள் தானா? இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதில் தமிழக அரசின் பங்களிப்பு என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகளையும், தனியார் துறையில் 50 லட்சம் வேலைகளையும் ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த மூன்றரை ஆண்டுகளில் அதில் வெறும் 10 விழுக்காட்டை மட்டுமே நிறைவேற்றியிருப்பதன் மூலம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்து விட்டது.
அதற்காகவும், தவறான புள்ளிவிவரங்களை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்வதற்காகவும் தமிழக மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.