கர்நாடக வேலைவாய்ப்பு சட்டம் ; தமிழ்நாட்டிலும் சட்டமியற்ற என்ன தயக்கம்? அன்புமணி கேள்வி
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடகா
கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிர்வாக பணிகளில் 50 சதவீதமும், நிர்வாக அல்லாத பணிகளிலும் 75 சதவீதமும், டி மற்றும் சி பணிகளில் 100 சதவீதமும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாளை கர்நாடக சட்டமன்றத்தில் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இதே போல் தமிழர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியீட்டுள்ளார். இந்த அறிக்கையில், “கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் முழுக்க முழுக்க கன்னடர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்ற சட்ட முன்வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டால், பிற மாநிலத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் கூட, கர்நாடக மக்களின் வேலை உரிமையை பாதுகாக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது. கர்நாடகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவிலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது.
தமிழ்நாடு
ஆந்திரத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள ஸ்ரீசிட்டி தொழில்பேட்டையில் தமிழர்களுக்கு அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. கர்நாடகத்திலும் இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால், கர்நாடகத்திலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். இதனால், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் இனி பறிக்கப்பட்டுவிடும்.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.
திமுக வாக்குறுதி
கடந்த 2021 ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றுவதில் எந்த சிக்கலும் தடையும் இல்லை.
எனவே, இனியும் தயங்காமல் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். துணை மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்காக வரும் அக்டோபர் மாவட்டம் கூடவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.