காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஹாப்பி நியூஸ்!
காலாண்டு விடுமுறை அதிகரிக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்கள்
நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை முன்பே வெளியிட்டிருந்தது.
அதில், 220 வேலை நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக 210 நாட்கள் வரை மட்டுமே வேலை நாட்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதனை 220 ஆக மாற்றியதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதன் எதிரொலியாக பள்ளி வேலை நாட்களை 210 ஆக குறைத்து சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு,
அதற்கான தேர்வும் நடந்துவருகிறது. வருகிற வெள்ளிக்கிழமை காலாண்டு தேர்வு முடியும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
அன்பில் மகேஷ்
பின்னர், 3-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால் விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
அதன்படி, பள்ளி காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக துறை சார்ந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.
அதன்படி, விடுமுறை நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் அன்பில் மகேஸ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது கூறியுள்ளார். இதனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் விடுமுறை நீட்டிப்பு குறித்து காத்திருக்கின்றனர்.